தொடங்கியது இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்! கடும் போக்குவரத்து நெரிசல்!
பழங்காநத்தத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா எனும் இஸ்லாமிய வழிபாட்டு தலமும் உள்ளது. இதில், சிக்கந்தர் பாதுஷா தர்காவில் இந்த வருட தொடக்கத்தில் சந்தனக்கூடு திருவிழா முடிந்ததும், அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 18ஆம் தேதி ஆடு, கோழிகளை பலியிடும் கந்தூரி நிகழ்வு நடைபெறபோவதாக இஸ்லாமியர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து, திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழிகளை பலியிட அனுமதிஇல்லை என மதுரை மாவட்ட காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஆடு கோழிகளை பலியிட கூடாது என இந்து அமைப்பினரும் போர்க்கொடி தூக்கிய காரணத்தால் இஸ்லாமிய அமைப்புகள் இந்த கந்தூரி நிகழ்வு எப்போதும் நடப்பது தான் என வாதம் செய்து வந்தனர்.
144 தடை உத்தரவுபோட்ட ஆட்சியர்
திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதற்கான நோட்டீஸ், சுவரொட்டிகளும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டது. ஆனால், போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்து இருந்தனர்.இதனை அடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
போராட்டத்தில் இந்து முன்னணியினர் தவிர மற்ற சில இந்து அமைப்புகளும் கலந்து கொள்ள உள்ளதாகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் போராட்டத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், போராட்டம் நடத்துவதற்கோ, கூட்டம் கூடுவதற்கோ அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால், இந்து முன்னணி அமைப்பினரின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கவும் செய்திருந்தார்கள்.
அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
இந்த பரபரப்பான சூழலில், போராட்டம் நடத்திக்கொள்ள கோரப்பட்ட மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மதுரை அருகே இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியது. உத்தரவின் படி, பழங்காநத்தத்தில் இன்று மாலை 5 – 6 மணி வரை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனவும், பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என நிபந்தனைகளையும் வழங்கியுள்ளது. போராட்டம் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கியிருந்தது.
தொடங்கிய போராட்டம்
உயர்நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் தொடங்கினர். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தியும், மற்றொரு சமூகத்தினர் சொந்தம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கம்மீட்டு கொண்டு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள், அந்த பகுதியில் அதிகமான மக்கள் கூடிய காரணத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. அதிகமான மக்கள் அந்த பகுதியில் கூடியிருப்பதால் பாதுகாப்புக்காக போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.