“இதுதான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி.,” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!
மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும். இந்தி திணிப்பை கைவிட வேண்டும். இருமொழி கொள்கையே தொடர வேண்டும். இதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார். நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட பிறந்தநாள் நிகழ்வில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.
அதனை அடுத்து இன்று காலை முதல் கலைஞர் நினைவிடம், அறிஞர் அண்ணா நினைவிடம் , பெரியார் திடலில் மரியாதை செலுத்தினார். சென்னை அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடக்கி வைத்தார். அதன் பிறகு கோபாலபுரத்தில் தனது தாயாரிடம் ஆசி வாங்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும். இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். இங்கு இருக்க கூடிய இருமொழி கொள்கையே தொடர வேண்டும். இதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி. ” என கூறினார். தொகுதி மறுசீரமைப்பு பற்றி இல்லாத பிரச்னையை முதலமைச்சர் பேசுகிறார் என மத்திய அரசு குற்றம் சாட்டி வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இல்லாத பிரச்சனை பற்றி நான் ஏன் கருத்து கூற வேண்டும்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, சீமான், தவெக தலைவர் விஜய், திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் பல்வேறு பிரபலங்களும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.