பேரவை நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை வழங்கப்படும் – சபாநாயகர் விளக்கம்
சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாத காரணத்தினால் அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதுகுறித்து பேட்டியளித்திருந்தார்.
அவர் கூறுகையில், ‘எனக்கு முன்பும், பின்பும் பேசியவர்களின் பேச்சு நேரலை செய்யப்பட்டது; எனது பேச்சை நேரலை செய்யவில்லை. பேரவையில் நான் பேசியதை நேரலையில் ஒளிபரப்பவில்லை. கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல் பதிலை ஒளிபரப்புகிறார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை தொடந்து சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை வழங்கப்படும் எனவும், நேரலை வழங்குவதில் உள் நோக்கம் எதுவும் இல்லை எனவும் சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.