கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? -அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!
தமிழகத்தில் கல்லூரிகளில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும், இதன்காரணமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதனையடுத்து,இன்று கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில்,ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்: “சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து 12 வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு விடும்,அதற்கு பிறகுதான் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.ஆனால்,சில தனியார் கல்லூரிகள் அரசின் அறிவிப்புக்கு முன்னரே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. அவ்வாறு செய்யக்கூடாது.மேலும்,பாலிடெக்னிக் கல்லூரிகளில் மட்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது”,என்று தெரிவித்தார்.