#Breaking: குரூப் 1 முறைகேட்டில் தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடத்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் 2015ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள்களை எடுத்து, அதில் திருத்தங்கள் செய்து மீண்டும் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.மேலும் இந்த வழக்கை இன்று (பிப்ரவரி 28ம் தேதி) விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.இதே நாளில் திருநங்கை ஸ்வப்னா வழக்கையும் விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ,தேர்வு முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தது.இறுதியாக ஏப்ரல் 6 -ஆம் தேதிக்குள் தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.