விசிக தலைவர் திருமாவளவன் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருமாவளவன் வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் வேளச்சேரி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேளச்சேரி காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. விசிக அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்து 10 பேர் தன்னை தாக்கியதாக வேதா அருண் நாகராஜன் என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.
விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்க கட்சி அலுவகத்திற்கு சென்ற தன்னை வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் தாக்கியதாக, சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர் நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் திருமாவளவன், வீரப்பன் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை முயற்சி உள்ளிட் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டது.
பின்னர் இந்த வழக்கு வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து, வழக்கின் விசாரணை நிலை குறித்தும் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்றம். இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் வேளச்சேரி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அணையிட்டுள்ளனர்.