ரூ.60,000 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்.!
திருப்போரூரில் உள்ள ரூ.60,000 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்.!
சென்னையை அடுத்து திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கும், ஆளவந்தான் கோவிலுக்கும் சொந்தமாக சுமார் 2,00 ஏக்கர் நிலம் உள்ளது. இப்பகுதியில் அதிகம் ஐ.டி. நிறுவனங்கள் உள்ளது. இதனால் அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.60,000 கோடியாகும். இந்த நிலத்தை அபகரிக்க 20-க்கும் மேற்பட்ட கும்பல்கள் கடந்த சில ஆண்டுகளாக சுற்றித் திரிகின்றன. இந்த கும்பல்கள் போலி ஆவணங்களை தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும் விற்பனை செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதை உடனே தடுத்து நிறுத்தவில்லை என்றால், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த கும்பல் விற்பனை செய்து விடும். எனவே, இந்த கோவில்களின் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன், மனுதாரர் ஜெகன்நாத் ஆகியோர் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கும் வகையில், ஒரு வாரத்துக்கு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், வருகிற 10-ம் தேதி வரை இரு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்ய பத்திரப்பதிவு துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. வருவாய்துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி. உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை வருகிற 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்.