சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணத்தை நிறுத்த முடியாது – டிடிவி தினகரன்..!
இன்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பெங்களூரில் உள்ள சசிகலா 7-ஆம் தேதி தமிழகத்திற்கு திரும்பி வருகிறார். அதனால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள், தமிழக மக்கள் சசிகலா நல்லவிதமாக வந்து சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை உள்ள கழக தொண்டர்கள் தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை அலைகடலென திரண்டு இருந்து சசிகலாவை வரவேற்க தயாராகி வருகிறார்கள். சசிகலா தமிழகம் வருகிறார் என்பதற்கு அம்மா நினைவிடம், புரட்சித்தலைவர் நினைவிடத்தை தமிழக அரசு மூடியுள்ளது. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்த முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனால், சசிகலா கொரோனா சிகிக்சை பெற்று வந்தநிலையில், கடந்த 31-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டிற்கு சசிகலா தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.