ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் பணியிடைநீக்கம் செய்கிறோம்-உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதற்கு முன் நடந்த விசாரணையில் போக்குவரத்து காவல் இணை மற்றும் துணை ஆணையர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர் நீதிபதிகள்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.ஹெல்மெட் அணியாதவர்கள் மீது காவல்த்துறை எடுத்த நடவடிக்கை சரியாக இல்லை என்று போக்குவரத்து காவல் இணை மற்றும் துணை ஆணையர்களிடம் தெரிவித்தனர். இதற்கு தமிழக அரசு பதில் அளித்தது.அதில்,ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்போது ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஒருவர் கூட ஹெல்மெட் அணிவதில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.
ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் பணியிடைநீக்கம் செய்கிறோம் என்று தெரிவித்தது.பின் நீதிபதிகள் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.