#HelicopterCrash:தடவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு!
நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் தமிழக தடவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரியின் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 9 பேர் தமிழகம் வந்தார்கள்.இதனையடுத்து,நேற்று சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது.
ஆனால், ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து முழுமையாக எரிந்தது.இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து,ஹெலிகாபடர் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விமானப்படை சார்பில் நேற்று உத்தரவிடப்பட்டது.அதன்படி, விபத்து நடந்த காட்டேரி வனப்பகுதியில் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விமானப்படை ஹெலிகாப்டர் பாகங்கள் ஏற்கனவே ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில்,தற்போது விமானப்படை தளபதி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.அவருடன் இணைந்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்,ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் தமிழக தடவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையில்,5 அதிகாரிகள் அடங்கிய தடவியல் துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இந்த குழுவினர் காட்டேரி வனப்பகுதியில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.