கனமழை எதிரொலி : பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் தமிழகம் நோக்கி 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 670 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இன்று ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், ஒரு சில இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
மேலும், கனமழையின் எதிரொலியாக இன்று (27.11.2024) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகத் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.