கனமழை எதிரொலி: விழுப்புரத்தில் நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக விழுப்புரத்தில் நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து ஊரே வெள்ளக்காடாக மாறியது.
அதிலும் குறிப்பாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் இதில், விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று பிற்பகல் முதல் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததுடன், மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகவும் காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து பள்ளி, கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மாணவ, மாணவிகள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே, கனமழை வெள்ளத்தால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.