சென்னையில் பெரும் மழை: 4 விரைவு ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு.!
சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழை நீர் தேங்கியுள்ளதால் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று (15-10-2024) நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எந்தெந்த ரயில்கள்
- சென்னை சென்ட்ரலில் மாலை 4.35-க்கு புறப்பட வேண்டிய 16203 திருப்பதி விரைவு ரயில், முழுமையாக ரத்து.
- திருப்பதியில் மாலை 6.05-க்கு புறப்படவுள்ள 16058 சென்னை சென்ட்ரல் ரயில், முழுமையாக ரத்து.
- சென்னை சென்ட்ரலில் இரவு 9.15-க்கு புறப்படவுள்ள 16021 மைசூர் காவேரி ரயில், முழுமையாக ரத்து.
- சென்னை சென்ட்ரலில் இரவு 11 மணிக்கு புறப்படவுள்ள 22649 ஈரோடு ஏற்காடு ரயில், முழுமையாக ரத்து.
பயணிகள் கவனத்திற்கு
வானிலை நிலவரத்தின் தீவிரத்தைப் பொறுத்து, சில ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படலாம் அல்லது குறுகிய நேரமாக நிறுத்தப்படலாம். கனமழையின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படும். குறிப்பாக, பொதுமக்கள் மிகவும் அவசியமாக இருந்தால் மட்டும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு :
கனமழை எதிரொலியாக, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரயில் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே மரம் சரிந்து விழுந்ததால் நிறுத்தப்பட்டது. பின்னர், குரோம்பேட்டை போலீசார், ரயில்வே ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்திய பின் மின்சார ரயில் புறப்பட்டு சென்றது.