சென்னை கனமழை : அடுக்குமாடி குடியிருப்புகள் உள்வாங்கியது! குடியிருப்பு வாசிகள் அச்சம்!
அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கி இருப்பதால் குடியிருப்பு வாசிகள் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
சென்னை : பருவமழை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக தற்போது, சென்னையில் அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கி இருக்கிறது.
சென்னையில் பெய்து வரும் கனமழையால் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதியானது 150 மீ. தூரத்திற்கு, 20 அடி பள்ளத்திற்கு உள்வாங்கி இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும், அந்த கட்டிடத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் பெரிதளவு விரிசல்களும் ஏற்பட்டு இருக்கிறது.
அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் ஒரு உணவகம் கட்டி வருவதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என அங்குள்ள குடியிருப்பு வாசிகள் கூறி வருகின்றனர். இப்படி குடியிருப்பு சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்த குடியிருப்பில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவர்களது குடியிருப்பை விட்டு வெளியேறி சாலையில் வந்து தஞ்சம் புகுவந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்னும் 4 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் மேலும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும், இதற்கு விரைவில் ஏதேனும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.