டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும்.. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பருவமழையையொட்டி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். இதுபோன்று சென்னை நகரில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யலாம் என்றும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது எனவும் கூறியுள்ளார்.
நெருங்கும் கனமழை…முன்னெச்சரிக்கைகள் தீவிரம்… காவல்துறை அதிரடி நடவடிக்கை.!
அதாவது, வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை வலுப்பெற்றது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 510 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை மறுநாள் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவக்கூடும் என்றுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது என்றார். மேலும் கூறுகையில், மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம், தமிழகத்தில் 36 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுபோன்று மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகையிலும் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளதால் 9 மாவட்டங்களிலும் 6.5 செ.மீ முதல் 12 செ.மீ வரை மழை பதிவாக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அதன்படி, அக்.1 முதல் இன்று வரையிலான இயல்பு அளவான 277.5 மி.மீ-க்கு பதில் 241.7 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது எனவும் தென் மண்டல தலைவர் கூறியுள்ளார்.