நெருங்கும் பருவமழை.., நேற்று 7 அமைச்சர்கள் மீட்டிங்.! இன்று 22 கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு.!

Tamilnadu Rains

சென்னை : வானிலை ஆய்வு மண்டலம் விடுத்த கனமழை முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அண்டை மாநில கனமழை,  நிலச்சரிவு பாதிப்புகளை அடுத்து,  தமிழகத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வழக்கத்தை விட தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை, வெள்ள பாதிப்புகள் அதிகளவிலிருந்தன. மீட்புப்பணிகள், நிவாரண உதவிகள் என பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப சில மாதங்களானது.

அதேநிலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று ரிரிப்பன் மாளிகையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நேற்று சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு , தங்கம் தென்னரசு உள்ளிட்ட 7 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும், 3 திமுக எம்பிக்கள், சென்னை எம்எல்ஏக்கள், வருவாய்த்துறை ,  பேரிடர் துறை, மெட்ரோ நிர்வாகம் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

தற்போது தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தகவல் தெரிவித்து இருந்தது.

வானிலை ஆய்வு மைய கனமழை எச்சரிக்கையை அடுத்து, தமிழக அரசு 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஓர் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழையை எதிர்கொள்ளப் பேரிடர் துறை, வருவாய்த்துறையால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெள்ளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்