கனமழை எச்சரிக்கை – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்தது உத்தரவு.!
கனமழை எதிரொலியால் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். மேலும், கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருகின்ற சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கும், மாவட்டம் முழுவதையும் தயார்படுத்துவதற்கும் தரமான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மிக அதிக, கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் பட்சத்தில் ஏதேனும் அவசரத் தேவையைச் சமாளிக்க இயந்திரங்கள் மற்றும் போதுமான தயார்நிலை நடவடிக்கைகளை எடுக்கவும்” உத்ரவிடப்பட்டுள்ளது.