கனமழை எச்சரிக்கை: அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை!
தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கவும், வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய துறைகள் வழக்கம்போல் இயங்கும். மேலும், தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கவும், வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, மேலே குறிப்பிடப்பட்ட அந்த நான்கு மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எவையெல்லாம் இயங்கும்
அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, இரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.