மக்களே கவனம்!! இந்த 4 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை.!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும், நாளை மறுநாள் (31.12.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனை தொடர்ந்து 01.01.2024 மற்றும் 02.01.2024 தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மழைக்கு பின் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தமிழ்நாட்டை விட்டு விலகும் என்று தெரிகிறது.
ஏற்கனவே கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்த காரணத்தால் வெள்ளம் ஏற்பட்டது. இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் உள்ள நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்
(31.12.2023) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
(01.01.2024) மற்றும் (02.01.2024) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.