கனமழை: கோவை, திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கோவை, திருப்பூரில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு (23-10-2024) இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கோவை, திருப்பூரில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
இந்த மழை இன்னும் தொடர்வதாலும், இன்று கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டு இருப்பதாலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவையில் கடந்த 21 மணிநேரத்தில் (அக்.22, 8.30 – அக்.23, 5.30)
9 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. மேலும், திண்டுக்கல், நீலகிரியில் தலா 6 செ.மீ, திருப்பூரில் 5 செ.மீ. மழை பதிவு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.