கனமழை எதிரொலி: இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
ஈரோடு மாவட்டத்தில் மழை காரணமாக 22ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்யும் வகையில், இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 54 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 91 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்குவதால், அங்கு பொதுமக்களில் இயல்பு வாழ்கை பெரிதும் பதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, இன்றைய தினம் சில இடங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஈரோடு மாவட்டத்தில் மழை காரணமாக 22ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்யும் வகையில், இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே, இன்றைய பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 26.10.2024 அன்று சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது
மதுரை
கனமழை காரணமாக மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (26-10-2024) விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனி
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் இன்று (26-10-2024) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவொற்றியூர்
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று காலை வாயுக் கசிவு ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, தேசிய மீட்புக் குழுவினர் ஆய்வு செய்துவிட்டு தற்போது வாயுக் கசிவு ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.