தமிழ்நாட்டில் 10, 11 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் 7-11 செ.மீ வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைப்போல, சென்னை வானிலை ஆய்வு மையம், மற்றும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் ஆகியோரும் வானிலை தொடர்பான முக்கிய தகவலை கொடுத்திருக்கிறார்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையம் லேட்டஸ்டாக கொடுத்த தகவலின் படி, வரும் ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த தேதிகளில் 7-11 செ.மீ வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதைப்போல, சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, ஜனவரி 10-01-2025 கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என தகவலை தெரிவித்துள்ளது.
மேலும், டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கொடுத்த தகவலின் படி, வரும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மற்றும் தென் தமிழகம் (கடலூர் முதல் தூத்துக்குடி வரை) உள்ள மாவட்டங்களில் 2025 ஜனவரி 10-12 தேதிகளில் அதிக மழை பொழியும்” என தெரிவித்துள்ளார்.