தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது .
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை, நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஏற்கனவே, இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (15-12-2024) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். நேற்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (14-12-2024) அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.