Nivar strom: கடலூரில் வெளுத்து வாங்கும் கனமழை.. அதிகபட்சமாக 24.2 செ.மீ மழை பதிவு!
கடலூரில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், 1 மணிநேரத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதீ தீவீரப்புயலாக வலுப்பெற்று, தற்பொழுது 16 கி.மீ வேகத்தில் புதுச்சேரிக்கு அருகே கரையை கடந்து வருகிறது. புயல் கடக்க தொடங்கிய இடத்தில், 120 கி.மீ முதல் 140 கி.மீ வரை பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிவர் புயலின் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரையும் அருகில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், மழையில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்புப்பணியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த புயல் காரணமாக இன்று காலை முதல் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் இரவு 12.30 மணிவரை கடலூரில் 24.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலூரை தொடர்ந்து, புதுச்சேரியில் 19.3 செ.மீ மழையும், சென்னையில் 8.9 செ.மீ, காரைக்கால் 8.4 செ.மீ, நாகை 6.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த 1 மணி நேரத்தில் கடலூரில் மட்டும் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.