குன்னூரில் தொடரும் கனமழை., ஊட்டி மலை ரயில் சேவை ரத்து.!
குன்னூரில் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து ஊட்டி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை, தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை : ஊட்டி, குன்னூர் பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன. மேலும் , மரங்கள் அங்கங்கே சரிந்து விழுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதவரை குன்னூர் பகுதியில் 10 செமீ மழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக குன்னூர் பகுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கால்வாய் அடைப்பு, நடைபாதை படிக்கட்டுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மலைப்பாதை, ராணுவ பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்தன. அதனை தீயணைப்புத்துறையினர் விரைந்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். மேலும், கல்லாறு – குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டதால் ஊட்டி – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நவம்பர் 5ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.