லீவு விட்டாச்சு., ஆன்லைன் வகுப்புகளும் வேண்டாம்.! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!
கனமழையால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளும் நடத்த வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் , தெற்கு ஆந்திரா நோக்கி வரவுள்ளதால் நாளை, நாளை மறுநாள் பல்வேறு பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் கோவையில் இன்று அரைநாள் (மதியம் வரை) வகுப்பு மட்டும் வைக்க மாவட்ட ஆட்சியர், கோவை பள்ளி , கல்லூரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதேபோல, நாளை மற்றும் நாளை மறுநாள் மழை தீவிரமடையும் என்பதால் மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களுக்கான பாடத்திட்டம் முடிக்க சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் வைக்க திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.
கனமழை எச்சரிக்கை என்பதால் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்ப சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் தற்போதைய சூழலில் பாடம் நடத்த வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தைப் போல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று கனமழை காரணமாக விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.