கனமழை எதிரொலி! ரத்தான ரயில் விவரங்களை அறிய “QR ஸ்கேன்” வசதி!
ஆந்திர கனமழை காரணமாக ரயில்கள் ரத்தாகி இருப்பதால், ரயில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு 'QR ஸ்கேன்' வசசதியை அறிமுகப்படுத்தியுள்ளது தெற்கு ரயில்வே.
சென்னை : ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்து வருவதன் விளைவாக ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயணிகள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது ரயில் ரத்தாகி உள்ளதா அல்லது அந்த ரயிலின் நேரம் மாற்றப் பட்டுள்ளதா? எனக் குழப்பத்திலிருந்து வருகின்றனர். இந்த குழப்பத்தை நீக்குவதற்கும், பயணிக்கும் ரயில் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் ‘Help Desk’ போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளிடையே இதை மேற்கொண்டு எளிமைப்படுத்துவதற்கு புதிய நவீன வசதியை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியிருக்கிறது. அது தான் ‘QR Code’, இந்த QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் நம் பயணிக்கும் ரயில் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
QR ஸ்கேன் வசதி ..!
சமீபகாலமாகவே, பல நவீன வசதிகள் மக்களிடையே அறிமுகமாகி வருகிறது. அதில் ஒன்று தான் இந்த QR ஸ்கேன் வசதி. இந்த QR ஸ்கேன் மூலம் பணம் பரிவர்த்தனை வரை நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் தெற்கு ரயில்வே புதிதாக QR ஸ்கேன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பயணிகள் ரத்தான ரயில் விவரங்கள், நேரம் மாற்றியமைக்கப்பட்ட ரயிலின் அனைத்து விவரங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். இதில் நன்மையாகப் பார்க்கப்படுவது என்னவென்றால் நமது ரயில்களைத் தவிர அனைத்து ரயில்களைப் பற்றிய விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இதனால், நீங்கள் உங்கள் சக நண்பர்கள் யாரேனும் ரயில்களில் பயணிக்க உள்ளார்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் ரயில் குறித்த விவரங்களைப் பகிர்ந்தும் கொள்ளலாம்.
எப்படித் தெரிந்து கொள்வது …!
- சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இது போன்ற QR code-ஐ ஒட்டி வைத்துள்ளனர். அதனை நாம் நமது மொபைல் மூலம் ஏதேனும் ‘ஸ்கேன் செய்யும் ஆப்’ மூலம் ஸ்கேன் செய்தால் போதும்.
- உடனடியாக அந்த விவரங்கள் அறியக்கூடிய அந்த இணையதளப் பக்கத்திற்குக் கொண்டு செல்லும்.
- இணையப் பக்கத்திற்குச் செல்வதற்கு முன் ஏதேனும் விளம்பரங்கள் வந்தால் அதனை ‘skip’ செய்து கொள்ள வேண்டும்.
- அந்த இணையப்பக்கத்தில் எந்தெந்த ரயில்கள் ரத்தாகி உள்ளது, எந்த ரயில்கள் நேரம் மாற்றியுள்ளனர்,நேற்றைய ரயில் விவரங்கள், நாளைய ரயில் விவரங்கள் என அனைத்து விவரங்களையும் அதில் தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இந்த QR Scan வசதி பயணிகளுக்கு மிகவும் எளிமையாகத் தெரிந்து கொள்ளும் வண்ணமே அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல இந்த மொபைல் இல்லாதோர் ஸ்கேன் வசதியை உபயோகிக்கத் தெரியாதோருக்காகவே ‘Help Desk’ அமைக்கப்பட்டுள்ளது.
அதில் இருக்கும் அதிகாரிகளிடம் நம் ரயில் பற்றிய முழு விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அதிகாரிகளும் அவர்களுக்காக முழு விவரங்களையும் கூறி தெளிவுபடுத்தி வருகிறார்கள். இந்த சேவை ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பயணிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.