நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள இருவருக்கு உளம்நிறைந்த நல்வாழ்த்துகள் – பன்னீர்செல்வம்
நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள இருவருக்கு எனது உளம்நிறைந்த நல்வாழ்த்துகள் என்று தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய அளவில் இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்காக 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு மாற்று திறனாளி ஆசிரியர்களும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. விழுப்புரத்தில் செஞ்சிக்கு அருகிலுள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் திலீப் என்பவருக்கும், சென்னையில் அசோக் நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சரஸ்வதிக்கும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லி விக்யான் பவனில் வைத்து செப்டம்பர் 5-ம் தேதி விருதினை வழங்குகிறார்.
இந்நிலையில் இது குறித்து தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,வளமான மாணவ சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணியாற்றி தேசிய நல்லாசிரியர் விருது- 2020க்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள திரு.திலீப் (சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி) மற்றும் திருமதி.சரஸ்வதி (சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி) ஆகியோருக்கு எனது உளம்நிறைந்த நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
வளமான மாணவ சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணியாற்றி தேசிய நல்லாசிரியர் விருது- 2020க்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள திரு.திலீப் (சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி) மற்றும் திருமதி.சரஸ்வதி (சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி) ஆகியோருக்கு எனது உளம்நிறைந்த நல்வாழ்த்துகள்! pic.twitter.com/putlahqwxB
— O Panneerselvam (@OfficeOfOPS) August 22, 2020