#Helicopter Crash:”நெஞ்சம் அடைக்கிறது;இதயம் நொறுங்கி விட்டது” – தெலுங்கானா ஆளுநர் நேரில் அஞ்சலி!
நீலகிரி:ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது,வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தோளில் கருப்பு துணி அணிந்து வந்து, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உடலுக்கு மலர்வளையம் வைத்து, மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்.
அதே சமயம்,முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,விபத்து குறித்து இரு அவைகளிலும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில்,ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சற்று முன்னர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் கூறியதாவது:
“முதலில் நெஞ்சம் அடைக்கிறது,மரியாதைக்குரிய பிபின் ராவத் அவர்களோடு விபத்தில் இறந்த அனைவரது உடலுக்கும்அஞ்சலி செலுத்தி விட்டு வந்துள்ளேன்.அவர்களை இந்த நிலையில் பார்ப்போம் என்று நாம் நினைக்கவில்லை.அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது நாட்டுப்பற்றோடும்,நாட்டுப்பற்றோடு சேவை செய்வதும் என்பதும்தான் நாம் அவர்களுக்கு செலூத்தும் அஞ்சலியாக இருக்கும்.
முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் மிகச் சிறப்பாக செலாற்றியவர்,ஒவ்வொரு அணுவும்,ஒவ்வொரு நாடியும் அவர் நம் நாட்டிற்காக செலவு செய்துள்ளார்.
நோய் நொடி இல்லாமல் இருந்த அவர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார் என்ற செய்தியைக் கேட்டு இதயம் நொறுங்கி விட்டது.அதனால்தான் ஓடோடி அஞ்சலி செலுத்திவதற்காக வந்துள்ளேன்.மேலும்,உயிருக்கு போராடி கொண்டிருக்கும் கேப்டன் வருண் அவர்களை பார்த்துவிட்டு வந்துள்ளேன்.அவர் உடல் உறுப்புகள் நல்ல முறையில் இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நேரத்தில் ஒரு மனதோடு நமது பிரார்த்தனை அவர் காப்பாற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே.
மேலும்,இந்த நாட்டிற்கு பாதுகாப்பாகவும் சேவையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் “,என்று தெரிவித்தார்.