“அமைச்சர் சொன்ன பகீர் தகவல்;டாஸ்மாக் கடைகளை உடனே மூடுக” – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

Default Image

சென்னை:சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள்,ராக்கெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவுவதாக ஊடகப் பேட்டியில் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் எனவும், இச்சூழலில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?,உடனே அதை மூடுக எனவும் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

விடியா திமுக அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல்,தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு,கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை,தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“தமிழகத்தில் இந்த விடியா அரசு,ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொரோனா நோய்த் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.இதை,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுட்டிக்காட்டிய போதெல்லாம். கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று மழுப்பலான அறிக்கைகளை இந்த விடியா அரசு வெளியிட்டது.ஆனால், இந்த சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள்,ராக்கெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவுவதாக ஊடகப் பேட்டியில் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.மேலும்,பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நோய்த் தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில்,நாளொன்றுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக இந்த அரசே செய்திக் குறிப்பினையும் வெளியிடுகிறது. ஆனால், உண்மையில் 50 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களும், மருத்துவர்களும் தகவல் தெரிவிக்கின்றனர்.

அம்மாவின் அரசு எடுத்த இடையராத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தேர்தல் அறிவித்த 2021,பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா நோய்த் தொற்றால் சுமார் 500 பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர்.

2020-ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில், தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 775. அந்த காலக்கட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த,இன்றைய இந்த விடியா அரசின் முதலமைச்சராக இருக்கும் திரு.ஸ்டாலின் அவர்கள்,டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருப்பதால்தான் கொரோனா தொற்று பரவுகிறது என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.மேலும்,திரு.ஸ்டாலின் உட்பட அவரது கட்சியினர்
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி,தங்கள் வீடுகள் முன்பு கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.ஆனால்,இன்றைக்கு இந்த விடியா திமுக அரசின் வாக்குமூலப்படி,தினமும் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வேளையில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை மற்றும் அதனுடைய பார்களின் முன்பும் நூற்றுக்கணக்கானோர் எந்தவிதமான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூடி நிற்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.இதற்கு முன்னாள்,ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவிய கொரோனா நோய்த் தொற்று,தற்போது காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து 9 நபர்களுக்கு பரவுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாக செய்திகள் வெளிவருகின்றன.இதை திரு. மா. சுப்பிரமணியன் அவர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.தமிழக மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்த விடியா திமுக அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்து,டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு,ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று திமுக செயல்படுகிறது.ஆகவே,இந்த விடியா திமுக அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல்,தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு,கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை,தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்