தமிழகத்தில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில்,நேற்று ஒரேநாளில் 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.எனவே,கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,77,211 ஆக அதிகரித்துள்ளது.மேலும்,நேற்று ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்த நிலையில்,கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,872ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,”தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றினால் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய,இன்னும் இரண்டு நாட்களில் 10 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்படும்.
மேலும்,”தமிழகத்தில் 10 நாட்களுக்கு முன்பு இக்கட்டான சூழ்நிலை இருந்தது.ஆனால்,முதல்வர் எடுத்த நடவடிக்கைகளால் தற்போது ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு உள்ளது.அதுமட்டுமல்லாமல்,ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. மேலும்,கடந்த நான்கு நாட்களில் கொரோனா பாதிப்பு குறைவாகவே பதிவாகியுள்ளது.
அதனால்,தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை”,என்று கூறினார்.