திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இவர் ஒருவரே போதும்..! – டிடிவி தினகரன்
திமுக ஆட்சியை கொண்டு முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருவரே போதும் என டிடிவி தினகரன் பேட்டி.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தர்மபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடி இருந்தால் நிச்சயம் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.
ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லாத காரணத்தால் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. அம்மாவின் சின்னமான இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில், துரோகிகள் கையில் உள்ளது. அதனால் அந்த கட்சிக்கும் இடைத்தேர்தலில் எங்களின் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்குறுதியை நிறைவேற்றாத திமுகவுக்கும் நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை. திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பழனிசாமி செய்த தவறான செயலால், கடந்த தேர்தலில் திமுகவை மக்கள் ஆட்சியில் அமர்த்தி விட்டனர்.
வரும் மக்களை தேர்தலில் திமுகவை வீழ்த்த விரும்பும் கட்சிகளோடு இணைந்து ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அந்த அணியில் இணைந்து நாங்களும் பணியாற்ற முன்வருவோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு ஏ டி எம் மையங்களில் கொள்ளை நடந்த சம்பவம் காட்டுகிறது.
தமிழகத்தில் மலிந்து கிடக்கும் போதைப் பொருளால் மாணவ செல்வங்கள் சீரழிந்து வருகின்றனர். இதனால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் வேதனையில் தவிக்கின்றனர். திமுக ஆட்சியை கொண்டு முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருவரே போதும் என தெரிவித்துள்ளார்.
பேனா சின்னத்தை கருணாநிதி நினைவிடத்தில் சொந்த நிதியில் திமுக வைக்கலாம். கடல் இல்லாத இடத்தில் திமுக அரசு நிறுவினால் யாருக்கும் எந்த ஆட்சபமும் இல்லை. திமுகவிற்கு ரூ.81 கோடி என்பது பெரிய பணமல்ல. இதனை தங்கள் சொந்த நிதியில் இருந்து கட்டலாம் என தெரிவித்துள்ளார்.