கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா..? – ஓபிஎஸ் அறிக்கை

Default Image

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். 

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடையும் வகையில் ICMR வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டுமென்று மாண்புமிகு முதல்வர்  அவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வறுமையினால் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்து. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தேசிய அளவில் ஒரு முடிவினை எடுக்குமாறு நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு 30-05-2021 அன்று ஒரு கடிதம் எழுதினேன்.

இது தொடர்பான வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகின்ற சூழ்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கில் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டோரின் குடும்பத்திற்கும் இந்த 50,000 ரூபாய் இழப்பீடு பொருந்தும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாக தகவல்கள் வந்தபோது, தமிழ்நாடு அரசு எவ்விதமான நிவாரணமும் கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்காத நிலையில், அதைக் குறைத்துக் காட்ட வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், பெற்றோரை இழந்த அனாதைக் குழந்தைகள் இழப்பீடு பெறுவதைத் தவிர வேறு எதற்கும் இறப்புச் சான்றிதழ் பயன்படாது என்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கூறி இருந்தார்.

இது 19-07-2021 நாளிட்ட பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. மேலும், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது கொரோனா உறுதி செய்யப்பட்டு, பின்னர் மாரடைப்பு காரணமாகவோ அல்லது நுரையீரல் பாதிப்பு காரணமாகவோ உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்தால், அவருடைய உயிரிழப்புக் காரணம் கொரோனா இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இது 11-07-2021 நாளிட்ட பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஐ.சி.எம்.ஆர்.மருத்துவமனைஅதிகாரி, “ஒருவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம். ஆனால் அந்த மாரடைப்பிற்கு நுரையீரல் செயலின்மை காரணமாக இருந்து, அந்த நுரையீரல் செயலின்மைக்கு காரணம் கொரோனா நோய்த் தொற்றாக இருந்தால், அந்த உயிரிழப்புக்கு காரணம் கொரோனா என்று தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இதனை சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அதற்குரிய படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், ஒருவருக்கு கொரோனா தொற்றிற்கான சிகிச்சை மேற்கொண்டிருக்கும்போது, கொரோனா பரிசோதனை மறுபடியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரை தேசிய சிகிச்சை கோவிட் வழிகாட்டி நெறிமுறைகளில் இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்துமா, இருதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய் போன்ற இணை நோய்கள் இருக்கலாம் என்றும், இந்த நோய்கள் நுரையீரலில் உள்ள தொற்றினை அதிகரித்து, அதன்மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு, உயிரிழந்து இருக்கலாம் என்றும், ஆனால், இணை நோய்கள் அதற்குக் காரணம் அல்ல என்றும், ஏனெனில் அந்த இணை நோய்கள் நேரடியாக உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை என்றும், எது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கின்றதோ, அதுதான் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதிலிருந்து, ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கூற்றுக்கும் முரண்பாடு உள்ளது தெரிய வருகிறது. எனவே, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளபடி, அனைனருக்கும் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நான் எனது 20-07-2021 அறிக்கை வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

தற்போது, கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நிலை உருவாகி விட்டது. கொரோனாவால் உயிரிழந்த அனைத்துக் குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடையும் வகையில், ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.’ என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்