தமிழக அரசு அமைத்த குழு உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டுக் கொண்டு வந்துவிட்டதா..? – எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் இன்று சென்னையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சார்பில் நடைபெறும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உக்ரைனில் இருந்து தினமும் 4 ஆயிரம் மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாணவரையும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதுதான் மத்திய அரசின் நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இதுவரை மத்திய அரசு உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பேர் இந்தியா வந்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அமைத்துள்ள குழு இதுவரை எத்தனை மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்டு வந்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நீட் தேர்வு குறித்து பேசிய அவர், எல்லாவற்றிற்கும் தகுதி தேர்வு என்பது ஒன்று உண்டு. அதன் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வந்த பின்பு அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவம் படித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.