சுயநலத்துக்காக முதல்வர் பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? – மு.க.ஸ்டாலின்
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சுயநலத்துக்காக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூரில் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய திமுக தலைவர் முக ஸ்டாலின், கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும்போது முதல்வர் பழனிசாமி நிவாரணம் வழங்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது சுயநலத்துக்காக பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் இதை நான் வரவேற்கிறேன் என கூறி, கொரோனா மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் 2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.