தமிழகத்தின் 126 ஆண்டுகால உரிமை பறிபோனதா? -முதல்வருக்கு டிடிவி தினகரன் 6 கேள்விகள்!

Default Image

உச்சநீதிமன்றத்தீர்ப்பின் படி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு தி.மு.க அரசுக்கு தடையாக இருப்பது எது? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக்கொள்ளலாம் எனவும்,உறுதித் தன்மையை தெரிந்து கொண்டு 152 அடி வரை தண்ணீரை  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் , ஆனால்,கேரள அரசு அளித்த தவறான தகவல்கள் உண்மைக்கு புறம்பாக எழுப்பி வரும் பிரச்சனைகளுக்கு அடிபணிந்த தமிழக அரசு, தண்ணீர் 138 அடியை எட்டும் முன்பே, முல்லைப்பெரியாறு அணையை, கேரள அதிகாரிகள் முன்னிலையில் திறந்துவிட்டதாகவும் அதிமுக தலைமை குற்றம் சாட்டியது.

மேலும்,தமிழக அரசைக் கண்டித்து 5 மாவட்டங்களில் வரும் 9 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக இன்று அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில்,முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் உரிமையைத் தி.மு.க அரசு கேரளாவிடம் பறிகொடுத்துவிட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென அமமுகவைச் சேர்ந்த டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,தமிழகத்தின் 126 ஆண்டுகால உரிமை பறிபோனதா? என்று கூறி முதல்வருக்கு டிடிவி தினகரன் 6 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் உரிமையைத் தி.மு.க அரசு கேரளாவிடம் பறிகொடுத்துவிட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாட்டின் உரிமைகளை சுயலாபத்திற்காகவோ, துணிவின்மையாலோ காவு கொடுத்துவிடுவார்கள் என்ற கடந்த கால வரலாற்றை முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்திற்குச் சென்று போராடி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று தீர்ப்பைப் பெற்றுத் தந்து, அதன்படியே அணையில் தண்ணீரையும் தேக்கிக் காட்டியவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

ஆனால், தற்போது நீர்மட்டம் 138 அடியைத் தாண்டியவுடனேயே கோள அமைச்சர்களும், அம்மாநில அதிகாரிகளும் தமிழக அரசுக்கு தெரியாமலேயே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கோளாவுக்கு தண்ணீரை திறந்துவிட்டதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.இதன்மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் திரு.ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன்?

1) தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அதிகாரிகள் அவர்களுடைய மாநிலத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டது எப்படி? இதன் மூலம் அணை கட்டப்பட்டதில் இருந்து 126 ஆண்டுகளாக தமிழ்நாட்டிடம் இருந்த உரிமை பறிபோய்விட்டதா?

2) உச்சநீதிமன்றத்தீர்ப்பின் படி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு தி.மு.க அரசுக்கு தடையாக இருப்பது எது?

3) முல்லைப்பெரியாறு அணை குறித்து எற்கனவே பல்வேறு பொய் பரப்புரைகளை கேரளா தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் வகையில் தி.மு.க அரசு நடந்துகொள்வது என்?

4) தமிழகத்தின் 5 மாவட்ட மக்களுக்காக கட்டப்பட்ட அணையில் இருந்து அவர்களது பயன்பாட்டுக்கான தண்ணீரை கேரளாவுக்கு திறந்துவிட வேண்டிய அவசியம் என்ன?

5) இதற்கு அனுமதித்த தவறை மூடிமறைக்க முயற்சிப்பதோடு, அதனை நியாயப்படுத்தும் வகையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் பேசுவது தென்மாவட்ட மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமில்லையா?

6) தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணைப்பகுதியில் கேரளாவின் நீர்வளம் மற்றும் வேளாண் துறைகளின் அமைச்சர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு செய்யும் நிலையில், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சரும், வேளாண்துறை அமைச்சரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இதுவரை இவர்கள் அங்கே சென்று ஆய்வு செய்யாதது ஏன்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் முதலமைச்சர் உரிய விளக்கமளிப்பாரா? முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமை  காப்பாற்றப்படுமா? இல்லை தனது தந்தை கருணாநிதி காலத்தைப் போல தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்துவிடுவாரா?”,என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru
Lokesh Kanagaraj - Vijay
mugamathu kaif about pant
Donald Trump - Kamala Haaris