‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!’ மகாகவி பாரதியார்-137வது பிறந்த தின சிறப்பு பகிர்வு!
- மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- தமிழ் இலக்கியவாதி, தமிழாசிரியர், விடுதலை போராட்டவீரர், பத்திரிக்கையாளர் என தமிழுக்கும் தாய் நாட்டிற்கும் பலவகையில் சேவையாற்றியுள்ளார்.
1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி – இலக்குமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் சுப்பிரமணியன். 1897ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளம் வயதிலேயே கவிபாடும் திறன் பெற்றிருந்தார். தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் பல தமிழ் கவிதைகள், இலக்கியங்கள் என பல படைப்புகளை எழுதியுள்ளார். எட்டப்ப நாயக்கர் மன்னரின் அவை கவிஞராகவும் பணிபுரிந்துள்ளார். எட்டப்ப நாயக்கர் தான் பாரதி என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினார். பின்னாளில் அது பாரதியார் என புகழப்பட்டது.
இவர் மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். தமிழ், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம் போன்ற மொழிகளை கற்று தேர்ந்தவர். இருந்தாலும் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்து கூறியவர்.
தனது இலக்கிய படைப்புகள் மூலமும், தனது கவிதைகள் மூலமும் சுதந்திர வேட்கையை மக்களிடம் பரப்ப செய்தார். இதனால் பாரதியாரின் கவிதைகள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்டன. இவர் எழுதிய புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிராக சென்னையில் ஆங்கிலேயர் முன் பெரிய விவாதமே நடைபெற்றது.
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற பல படைப்புகளை எழுதியுள்ளார். நாட்டிலேயே முதன்முதலாக பாரதியாரின் இலக்கியங்கள் தான் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. 1949இல் தமிழக அரசால் இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கப்பட்டன.
தமிழுக்கும் நம் தாய் நாட்டிற்கும் பல்வேறு இலக்கிய சேவைகளை செய்த மகாகவி பாரதியார் 1921 செப்டம்பர் 12 ஆம் தேதி இளம் வயதில் இயற்கை எய்தினார். தற்காலத்து இளைஞர்களுக்கும் ஓர் இலக்கிய உந்துசக்தியாக இவரது பாடல்களும், கவிதைகளும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.