மகிழ்ச்சி…24 மணி நேரத்தில் மாணவர் அப்துல் கலாமுக்கு வீடு -அசத்திய முதல்வர்!
மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்து சமூக வலைத்தளங்களில் வைரலான பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம் பெற்றோருக்கு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர்,அப்துல் கலாம் என்ற மாணவர் மனிதநேயம் குறித்து பேட்டியளித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில், மனிதநேயம் குறித்து பேட்டியளித்த மாணவர் அப்துல் கலாமை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்.
அப்போது, தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் மாணவர் அப்துல் கலாமின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,உடனடியாக அவருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் நேற்று தொலைபேசி வாயிலாக உத்தரவிட்டார்.
இதனையடுத்து அமைச்சர் அவர்கள்,நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும் என்றும் பின்னர் யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் என்று உரக்கச் சொன்ன மாணவர் ஏ.அப்துல் கலாமை பாராட்டி அவருக்கு “பெரியார் இன்றும் என்றும்” நூலினை பரிசாக வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,மாணவர் ஏ.அப்துல் கலாம் பெற்றோருக்கு 24 மணி நேரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்.இது மாணவர் அப்துல் கலாம் பெற்றோர்களிடையே அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார். pic.twitter.com/A9lSMFOvel
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 26, 2022