ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை – மத்திய அமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் கடிதம்!
ஹஜ் யாத்திரை புறப்பாடு மையங்கள் பற்றிய முடிவு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும்,அதில் சென்னை சேர்க்கப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு புறப்பாடு மையங்கள் 21 இல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது. இப்பொழுதும் அதே எண்ணிக்கை என்பது பொறுத்தமல்ல எனவும்,ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய சிறுபான்மை நல அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அவர்களுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் கூறியிருப்பதாவது:
“கொரோனா காரணமாக ஹஜ் புறப்பாடு மையங்கள் (Embarkation Centres) 21 இல் இருந்து 10 ஆக கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. 2022 லிலும் 10 மையங்களே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத். அகமதாபாத், பெங்களூரு, கவுகாத்தி, லக்னோ, ஸ்ரீநகர், கொச்சி ஆகியன ஆகும். தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் பயணிகள் கொச்சியில் போய் ஏற வேண்டும். ஆயிரக் கணக்கான பேர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்.
1987 இல் இருந்து சென்னையில் புறப்பாடு மையம் இருந்து வந்திருக்கிறது. சென்னையில் இப்பயணிகள் ஓய்வு எடுத்து செல்வதற்கான ஹஜ் இல்லம் இருக்கிறது. இதை தமிழ்நாடு ஹஜ் குழுவும், ஹஜ் சேவை அமைப்பும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன.
கொரோனா காரணம் சொல்லப்பட்டுள்ளது. இம்முடிவு எடுக்கப்பட்டுள்ள நேரத்தில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது நவம்பர் 3 அன்று மட்டும் 7545 புதிய தொற்றுகள். ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படும் நேரத்தில் நிலைமை என்னவாக இருக்கும் என கணிக்க இயலாது.
கொரோனா சூழலில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பயணிகள் குறிப்பாக மூத்த பயணிகளை அலைய விடுவது சரியல்ல. ஆகவே புறப்பாடு மையங்கள் பற்றிய முடிவு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். சென்னை சேர்க்கப்பட வேண்டும்.இக்கடிதத்திற்கு விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை.
கோவிட் காரணமாக கடந்த ஆண்டு புறப்பாடு மையங்கள் 21 இல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது. இப்பொழுதும் அதே எண்ணிக்கை என்பது பொறுத்தமல்ல.
முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். @naqvimukhtar #ஹஜ் pic.twitter.com/SpW0HK8BZq
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 6, 2021