அதிகரித்து வரும் H3N2 வைரஸ்! மார்ச் 10ம் தேதி மெகா காய்ச்சல் முகாம்.. அமைச்சர் அறிவிப்பு
H3N2 வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மெகா கேம்ப் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்.
இன்ஃப்ளுயன்சா H3N2 வைரஸ்:
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இன்ஃப்ளுயன்சா H3N2 வைரஸ் (Influenza H3N2) பாதிப்பு அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்திருந்தது. இந்த H3N2 வைரஸானது கொரோனோ போல வேகமாக பரவும் தன்மை கொண்டது. தற்போது அதிக அளவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்திருந்தது.
அறிகுறிகள் மாற்றும் அறிவுறுத்தல்:
காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை H3N2 வைரஸின் அறிகுறிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும், குறிப்பாக வயதானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது.
மருத்துவர்கள் எச்சரிக்கை:
தற்போது பரவும் காய்ச்சலானது இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸின் துணை வகையான H3N2 வைரஸ் என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இந்த இன்ஃப்ளுயன்சா ‘எச்-3 என்-2’ வைரஸ் தமிழ்நாட்டிலும் வேகமாக பரவி வருவது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனைகளில் வழக்கத்தை விட அதிகளவில் காய்ச்சல் வழக்குகள் பதிவாகி வருகின்றன.
மெகா காய்ச்சல் முகாம்:
இந்த நிலையில், கொரோனாவை போல், ‘எச்-3 என்-2’ வைரஸ் வேகமாக பரவி வருவதற்கு மத்தியில் இதனை தடுப்பதற்காக தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாநிலம் முழுவதும் 1000 மெகா காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 200 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என்றும் மாநிலத்தில் போதிய மருந்துகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.