பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மிக மோசமாக பேசியிருப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.
இதனால் நேற்று திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நீதித்துறை மற்றும் காவல் துறை குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.இதனால் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காவல் துறையினர் மழையிலும் வெயிலிலும் தங்களது குடும்பத்தினரையும்,சொந்தங்களையும் மறந்து பொதுமக்கள் அமைதி யாக வாழ வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.