6 மணி நேரத்தில் ‘குலாப் புயல்’ உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்…!
அடுத்த ஆறு மணி நேரத்தில் வலுபெற்று ‘குலாப் புயல்’ மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த ஆறு மணி நேரத்தில் வலுபெற்று புயல் சின்னமாக மாறக்கூடும். இந்த புயல் சின்னம் மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடக்கு ஆந்திர-தெற்கு ஒடிசா கடற்கரையை விசாகப்பட்டினம்-கோபால்பூர்க்கு இடையே கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.