மகா விஷ்ணு விவகாரம்., அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் புதிய கட்டுப்பாடுகள்.! அன்பில் மகேஷ் தகவல்…
மகா விஷ்ணு விவகாரத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை அசோக் நகர் பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற நிகழ்வில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு என்பவர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். முன் ஜென்மம், மாற்றுத்திறனாளிகள் குறித்து விஷ பேச்சுக்களை அவர் பேசியிருந்தார்.
அப்போது அங்கிருந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் , மகா விஷ்ணு பேச்சை கடுமையாக எதிர்த்தார். ஆனால். மகா விஷ்ணு அவருக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை கூறினார். இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாக மாறியது. பின்னர் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய மகா விஷ்ணு மீது காவல்துறையில் புகார் எழுந்ததை அடுத்து கடந்த சனிக்கிழமையன்று அவர் கைது செய்யப்பட்டார்.
அரசு பள்ளியில் ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற அனுமதித்த காரணத்தால் பள்ளி தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதே போல வேறொரு அரசு பள்ளியிலும் இதே நிகழ்வு நடைபெற்றதால் அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பள்ளிகளில் ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்றது தொடர்பாகவும் , இனி இதுபோல நடைபெறாமல் இருப்பது தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அடுத்து முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தகவல்களை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர் கூறுகையில், “அரசுப்பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்படும். அந்த விசாரணை முடிந்த பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். பள்ளியில் மூடநம்பிக்கை கருத்துக்கள் பேசப்பட்டு இருப்பதை எந்த வகையிலும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அறிவுசார்ந்த முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இது போன்ற மூடநம்பிக்கைகளை தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் செய்லபடும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிகளில் இம்மாதிரியான நிகழ்வு நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். மதம் சார்ந்த எந்த ஒரு விஷயமும் கல்வித்துறையில் கலக்கப்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.