தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்..!
தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல விளக்கு பூஜையினையொட்டி நவம்பர் 15 ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதன் பின் டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.அவை பின்வருமாறு..
1. கேரள காவல் துறையின் மெய்நிகர் இணைய வழியான ( Virtual Que Portal) https://sabarimalaonline.org என்பதில் சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் பதிவு செய்ய வேண்டும்.
2. முதலில் வருபவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.அதன்படி நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்து 500 பக்தர்களும் அனுமதிக்கபடும்.
3. தரிசனத்திற்கு முன்புள்ள 48 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர், தொற்று இல்லை என்ற கொரோனா எதிர்மறை சான்றிதழ் உள்ள பக்தர்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சுயவிருப்பத்தின் பேரில் கட்டணத்தின் அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்தி சோதனையை பக்தர்கள் பரிசோதனை செய்து கொள்ள நுழைவு இடங்களில் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அந்த ஏற்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
4. 10 வயதுக்கு குறைவானவர்கள், 60-65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
5. சபரிமலை யாத்திரையின் போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டை, ஆயுஸ்மான் பாரத் அடையாள அட்டை போன்றவற்றை உடன் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6. பக்தர்கள் நெய் அபிஷேகம், பம்பை ஆற்றில் நீராடல் மற்றும் இரவு நேரங்களில் சன்னிதானம், பம்பை மற்றும் கணபதி திருக்கோயில் ஆகிய இடங்களில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
7. பக்தர்கள் எருமேலி மற்றும் வடசேரிக்கரை வழியாக மட்டுமே சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும் .