ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்த தனது வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது” என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளதை, அ.தி.மு.க. அரசும், முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும், நிதியமைச்சராகவும் – துணை முதலமைச்சராகவும் இருக்கும் திரு. ஓ. பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி.எஸ்.டி சட்டத்தை செயல்படுத்துவதால், உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் முன் வைத்தன. திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியது. அப்போது, “ஜி.எஸ்.டி சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் இழப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும். குறிப்பாக இரு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்” என்று மத்திய பா.ஜ.க. அரசு பொது வெளியிலும், சட்டரீதியாக நாடாளுமன்றத்திலும் உறுதியளித்தது. அந்த வாக்குறுதியை நம்பித்தான் பல்வேறு மாநிலங்களும் தங்கள் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி. அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தன.
டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சார்ந்த நிதியமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள், “ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரையிலான இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரியும்” மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவர்களுடனும் தமிழக அரசின் நிதியமைச்சர் செல்லவில்லை. ஒருவேளை மத்திய பா.ஜ.க. அரசு தங்கள் மீது கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற பயமோ என்னவோ!
எதற்கெடுத்தாலும் வழக்கமாக கடிதம் மட்டும் எழுதும் முதலமைச்சர் திரு. பழனிசாமியும் இது குறித்து மவுனமாகவே இருக்கிறார்.“ஆட்சியில் இருக்கப் போவது இதுவே கடைசிமுறை. ஆகவே நாம் எதற்காக மாநில அரசின் நிதி உரிமைக்காக மத்திய அரசுடன் மோதி, கடனாகப் பெற்ற பதவிக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்” என்ற அச்சத்தில், மாநில நிதி தன்னாட்சி உரிமையை ஒட்டுமொத்தமாக சரணாகதி செய்து விட்டு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி திரு. பழனிசாமி.
ஆகவே, ஜி.எஸ்.டி. சட்டத்தால் இதுவரை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு? வராமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதலமைச்சரும், நிதியமைச்சரும் ஒளிவு மறைவின்றி உடனடியாக வெளியிட வேண்டும். ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி ரூபாய் கடன் வலையில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் நிதி நிலைமையில், “ஜி.எஸ்.டி இழப்பீட்டையும்” சுமையாக ஏற்றி வைத்து – கஜானாவை காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதலமைச்சரும் – துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஆகவே, மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையைப் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். “மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்” என்ற வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்டிடவும் – ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிடவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதில் தொடர்ந்து எவ்வித நடவடிக்கையுமின்றி அமைதி காப்பது, மாநிலத்திற்கு மேலும் சில பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சு தூணாக இருந்த ஒரு வீரர் என்றால்…
சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வார தொடக்க நாளான நேற்று…
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…
சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…