குரூப் 2ஏ முறைகேடு : காவலர் சித்தாண்டி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
- சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்தது.
- இது தொடர்பாக காவலர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம், போலீசார் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கைக்கு நேரில் சென்றபோது காவலர் சித்தாண்டி தலைமறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மீது 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிஎன்பிசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட இதுவரை 14 பேர் கைதாகியுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவலர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம், போலீசார் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கைக்கு நேரில் சென்றபோது காவலர் சித்தாண்டி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, அவரது சகோதரரும், காரைக்குடி சார்-பதிவாளருமான வேல்முருகனிடம், சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இவர், கடந்த 2018-ம் ஆண்டு குரூப்-2 ஏ தேர்வு எழுதி வெற்றி பெற்றவர், என தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் காவலர் சித்தாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேட்டில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வரும் சித்தாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.