ஓணம் திருநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!

Tamilnadu CM MK Stalin

ஓணம் திருநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், கேரள மக்கள் அனைவராலும் எழுச்சியோடும் ஒற்றுமையோடும் கொண்டாடப்படும் அறுவடைப் பெருவிழாவாம் ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துகள்!

ஓணத்திருநாள் அன்று, தமிழ்நாட்டில் மலையாள மொழி பேசும் மக்கள் நிறைந்து வாழும் மாவட்டங்களான கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களுக்கு 2006-ஆம் ஆண்டும், தலைநகர் சென்னைக்கு 2007-ஆம் ஆண்டும் கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அறுவடைத் திருநாளாக மட்டுமல்லாமல், வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட திராவிட மன்னனான மாவேலியைக் கேரள மக்கள் அன்போடு வரவேற்கும் விழாவாகவும் குறியீட்டளவில் ஓணம் கொண்டாடப்படுகிறது. இத்தகைய ஓணம் திருநாள் சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியிலும் “மாயோன் மேய ஓண நன்னாள்” எனச் சிறப்புடன் பாடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு திராவிடப் பண்பாட்டுடன் பிரிக்க முடியாது, இரண்டறக் கலந்துள்ள ஓணத்தையும் விட்டுவைக்காமல், ஒரு தரப்பினர் ‘வாமன ஜெயந்தி’ என அதன் அடையாளத்தைப் பறிக்க முயல்கிறார்கள். கேரள மக்களே இத்தகைய குயுக்தி முயற்சிகளைப் புறக்கணிப்பார்கள்.

மக்களைப் பிளவுபடுத்தி, அதில் குளிர்காய நினைக்கும் சுயநல வஞ்சகர்கள் வீழ்ந்துபடும் ஓணமாக வரும் ஓணம் அமையும் வகையில் நாட்டு மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். சமத்துவமும், வளர்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த இந்தியாவை மீட்டெடுக்க நாம் அனைவரும் உறுதியேற்கிற நாளாக இந்த ஓணத் திருநாள் அமையட்டும்! நம் தென்னாட்டு மக்கள் காட்டிய முற்போக்கு அரசியல் பாதையில் ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் ஆண்டாக வருகிற ஆண்டு திகழட்டும்! திராவிட மொழிக் குடும்பத்தின் உடன்பிறப்புகளான கேரள மக்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எனது ஓணம் நல்வாழ்த்துகள்!’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்