#Breaking : மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தடை.? அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.!
சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக கடலில் பேனா சின்னம் 42 மீ உயரத்தில் 39 கோடி செலவில் சிலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இதற்கு தடை கேட்டு திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையை தென் மண்டலம் பசுமை தீர்ப்பாயம் விசாரிக்கிறது. இன்று முதற்கட்ட விசாரணை தொடங்கியது. அந்த மனுவில் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை மெரினா முதல் கோவளம் வரையில் உள்ள கடற்கரை பகுதியானது பாதுகாக்கப்பட்ட கடற்கரை பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆதலால் அங்கு புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது.
மேற்கொண்டு யாருடைய உடலையும் அங்கு அடக்கம் செய்யக்கூடாது. அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேவையில்லாத கட்டுமானங்களை நீக்கி மெரீனாவை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் இந்த மனு குறித்து எட்டு வாரங்களில் மத்திய மாநில அரசுகள், சென்னை – செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்கள் பதில் அளிக்க வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் தொடங்கும் என வழக்கை ஒத்தி வைத்தது.