பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் – மு.க.ஸ்டாலின்
மக்கள் ஆதரவுடன் இன்னும் 5 மாதத்தில் திமுக ஆட்சி அமையும் என்று கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை திமுக தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்களை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியம் குன்னம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது பேசிய முக ஸ்டாலின், மக்கள் ஆதரவுடன் இன்னும் 5 மாதத்தில் திமுக ஆட்சி அமையும். ஜெயலலிதாவின் மரணம் இன்றும் மர்மமாக இருக்கிறது. விசாரணை கமிஷனை நீடிக்கிறார்களே தவிர, முடிவு வரவில்லை. ஜெயலலிதா எங்களுக்கு எதிரிதான் என்றாலும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர். இந்த மர்மம் திமுக ஆட்சிக்கு வந்ததும் கலையப்படும். ஏழை மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி திமுக. இன்று சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சியைப் பிடிப்போம் என சொல்கிறார்கள்.
நானும் ரவுடி என சொல்வதுபோல் தான் விவசாயி என முதலமைச்சர் கூறி வருகிறார். பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர்தான் முதல்வர் பழனிசாமி. விவசாய சட்டங்கள் நட்டமன்றத்தில் ஆதரித்த கட்சிதான் அதிமுக. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்க்காதது ஏன்? என்றும் ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.