முதலமைச்சரை சந்தித்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ் !! சாம்பியனுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை!!
M.K.Stalin : தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டரான குகேஷ் முதலமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார்.
கனடாவில் நடைபெற்ற பிடே செஸ் தொடரில் நெருக்கடியான சூழ்நிலையில் வெற்றியை தக்க வைத்து சாம்பியன் பட்டத்தை வென்றார் இளம் செஸ் வீரரான குகேஷ். இந்த சாம்பியன் பட்டத்தின் மூலம் அவர் இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று நடப்பு உலக செஸ் சாம்பியனான சீன க்ராண்ட்மாஸ்டரான டிங் லிரினுடன் மோதவுள்ளார்.
இதற்கு முன் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான கேரி கேஸ்பரோவ் தனது 22-வது வயதில் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றதே குறைந்தபட்ச வயதாக இருந்தது. தற்போது இந்த சாதனையை 40 ஆண்டுகளுக்குப் பிறகு குகேஷ் தனது 17-வது வயதில் முறியடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
மேலும், தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாத் ஆனந்துக்கு அடுத்த படியாக ஒரு தமிழக வீரர் செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் குகேஷ். இதனால் அவருக்கு வாழ்த்து மழை குவிந்து கொண்டே வந்தது. இந்நிலையில், இன்றைய நாளில் குகேஷ் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இருவரும் செஸ் வீரர் குகேஷுக்கு அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், குகேஷுக்கு 75 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.